ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் மூன்று சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டுமே தற்போது இவ்விரு நகரங்களுக்கிடையில் தொடர்ச்சியான விமான சேவையை வழங்கும் ஒரே விமான சேவையாகும்.
இச்சேவைகளின் ஊடாக இலங்கையில் இருந்து உம்ராவுக்காக புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்லும் யாத்ரீகர்கள் வசதியானதொரு சேவையைப் பெற்றுக்கொள்ள மீண்டும் வழி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் ஞாயிறு தினங்களில் 1425 மணிக்கும் ஒவ்வொரு புதன் கிழமையும் 1415 மணிக்கும் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 281 விமானம் அதே தினம் முறையே 1810 மணிக்கும் 1800 மணிக்கும் ஜித்தாவை சென்றடையும். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் ஞாயிறு தினங்களில் 1925 மணிக்கும் ஒவ்வொரு புதன் கிழமையும் 1925 மணிக்கும் ஜித்தாவிலிருந்து புறப்படும் UL 282 விமானம் மறுநாள் முறையே 0415 மணிக்கும் 0405 மணிக்கும் கொழும்பை வந்தடையும்.
இலங்கையில் இருந்து செல்லும் பருவகால ஹஜ் யாத்ரீகர்களுக்கும் வருடம் முழுவதும் உம்ராவுக்காக செல்லும் யாத்ரீகர்களுக்கும் விருப்பத்திற்குரிய பயணத் தேர்வாக விளங்கும் ஜித்தாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமான சேவை வரலாறானது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாகும். நேரடி விமான சேவைக்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த பயணிகளின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, நடமாடும் சிக்கல்கள் உள்ள பயணிகள் போன்ற தேவையுள்ளவர்களுக்கு மேலதிக உதவிகளையும் வழங்குகிறது.
சவூதி அரேபியா அரசாங்கம் தனது விசாக் கொள்கையைத் தளர்த்தி, நாட்டை ஒரு செழிப்பான சுற்றுலாத் தலமாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது சவூதி அரேபியாவில் அதன் கொள்ளளவை மீளக் கட்டியெழுப்பிவருகிறது.
கொழும்பில் இருந்து தம்மாம் மற்றும் ரியாத்துக்கு தினசரி விமான சேவைகளை மேற்கொண்டுவரும் இந்த விமான நிறுவனம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள மூன்று நகரங்களுக்கு மொத்தம் 17 வாராந்த விமான சேவைகளை பயணிகளுக்கு வழங்குகிறது.