வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய திலீபன் எம்.பி! samugammedia

வட்டிக்கு பணம் கொடுப்பவர்களும், வாள்வெட்டில் ஈடுபடுபவர்களும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை இடமாற்றம் செய்ய முடியுமா என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (22.08) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இருந்த போது மக்கள் சுதந்திரமாக இரவு நேரத்தில் கூட நடனமாடினர். கிராமந் தோறும் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் இனங்காணபட்டனர். வாள்வெட்டுகள் ஒடுக்கப்பட்டன. போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்கள் பூட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இப்படி பல வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்த போது வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம் செய்யப்பட்டது முறையற்ற செயல்.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்களும், வாள்வெட்டுகளில் ஈடுபடுபவர்களும் பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்ய முடியுமா? என எனக்கு கேள்வி எழுகிறது. சமீபத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரே கண்டுபிடித்தனர். அதற்கான விசாரணைகள் சரியான முறையில் இடம்பெற வேண்டும்.

அதே போல், ஒரு வருடத்திற்கு முன் வவுனியாவில் காணாமல் போன நிரேஸ் பாலகிருஷ்ணன் என்ற இளைஞனின் விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒப்படைத்து நீதியான விசாரணையை செய்யுங்கள். இதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply