இலங்கையின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகரவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். இவற்றுடன் தமிழர்களின் தலைகளை கொய்வேன் என கூறிய மேர்வின் சில்வா நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார்.
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைவரையும் கைது செய்யக் கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று(25) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிடுவோமென உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மட்டுமல்லாது இனக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த வேண்டும்.
ராஜபக்சாக்களோடு கடந்த காலத்தில் இணைந்திருந்து எமது மக்களைக்.கொன்று குவித்த அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போதைய ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை இல்லாதொழி்க்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதனூடாகவே.இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். மாறாக தவறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இனக்கலவரத்தை இலங்கையில் தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கும்.
1983ம் ஆண்டு தமிழர் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த சந்தர்ப்பத்தில் அரசினால் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பொருளாதாரம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டது. 40 வருடங்களைக் கடந்தும் இதை மறந்துவிட முடியாது. இன்று வரை இதற்காக எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
இதைவிட தமிழர் தாயகத்திலுள்ள தென்கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய நூலகமான யாழ்ப்பாணத்தை அமைச்சர்களின் நேரடிக் கண்காணிப்பில் எரித்தனர் என்பதை உலகமே அறிந்த விடயம். இவ்வாறாக எமது இனத்தை இல்லாதொழிக்கின்ற கைங்கரியங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது.
கடந்த ஏழு தசாப்தங்களாக எமது மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலே வாழந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.உங்களால் எமது இனத்தை ஆள முடியாது என்ற நிலை காணப்பட்டால் எம்மை தனித்து வாழ வழி வகுங்கள் அல்லது எமது இனம் நிம்மதியாக வாழ்வதற்கேற்றவாறான சுயாட்சி உரிமையைத் தந்து எம்முடன் வாழ முன்வாருங்கள். மாறாக எம்மை அடக்கி ஆள முற்படாதீர்கள். எனத் தெரிவித்தார்.