இந்தியா அனுசரணையில் செயற்படுவதே தீர்வுக்கு வழி – விக்னேஸ்வரன் தெரிவிப்பு! samugammedia

இந்தியா அனுசரணை இன்றி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் மக்களின் தளபதி அமரர் அமிர்தலிங்கம் கருதியதால் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்றுக் கொண்டார் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கா. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்த தின நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர் அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய காலப்பகுதியில்  தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியாவே பெற்று கொடுக்கும் என மிகவும் ஆணித்தரமாக நம்பினார்.

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திட்ட இருந்த நிலையில் முதன் நாள் இந்தியாவுக்கு அமிர்தலிங்கம் அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் அசோகா ஹோட்டலில் தங்கி இருந்த அமிர்தலிங்கத்துடன் இந்தியாவின் வெளியுற உயர் அதிகாரிகள் இலங்கை இந்தியா ஒப்பந்தம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

அவருடன் விடுதலைப் புலிகள் தவிர்த்த 4 போராளி இயக்கங்கள் அழைக்கப்பட்டு இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை விரும்பாத நிலையில் இந்தியா அவருக்கு ஒரு பாடத்தை புகட்ட எண்ணியது.

அது தொடர்பில் அமிர்தலிங்கத்திற்கும் ஏனைய போராளிகள் இயக்கத்தின் தலைவர்களுக்கும் இந்தியா உயர் மட்டம் விளங்கப்படுத்தியது.

பிரதமர் ராஜீவ் காந்தி யுத்தம் இடம்பெறுகின்ற தமிழர் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு இந்தியா உணவுப் பொதிகள் வழங்கப் போவதாக தகவல் அனுப்பினார்.

கடல் மார்க்கமாக இருபது படகுகளில் சர்வதேச செயற்கை சங்கத்தின் அனுசரணையுடன் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடற்படை தமிழ் மக்களுக்கு வழங்க மறந்து விட்டது.

இந்நிலையில் ஜே.ஆருக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக நான் ஆகாயத்தால் உணவுப் பொருட்கள் வழங்கப் போகிறேன் என ராஜீவ் காந்தி ஜே.ஆருக்கு செய்தி அனுப்பினார்.

செய்தி அனுப்பி ஒரு மணித்தியாளத்துக்குள் உலங்கு வானூர்திகள் மூலம் தமிழர் பிரதேசங்களுக்கு உணவுப் பொதிகள் ஆகாய மார்க்கமாக வழங்கப்பட்டது .

இந்த எச்சரிக்கை இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை மறுத்தால் ஆகாய மார்க்கமாக குண்டுகள் வீசப்படும் என்ற செய்தியை இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கையாக விடுத்தது.

இந்தச் செய்தியால் வேறு வழி இன்றி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என அறிவித்த நிலையில்  அமிர்தலிங்கம் இந்தியாவின் அனுசரணை இல்லாமல் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்வை பெற முடியாத என்ற நம்பிக்கையுடன் அதனை ஏற்றார்.

மகாத்மா காந்திக்கு நேரு எவ்வாறு இருந்தாரோ அதேபோல் பெரியவர் தந்தை செல்வாவுக்கு அமிர்தலிங்கம் இருந்தார்.

1961 ஆம் ஆண்டு சத்யாக்கிரக போராட்டம் இடம்பெற்றபோது பெரியார் செல்வாவுடன் அமிர்தலிங்கமும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுடன் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தலைமைத்துவம் தூரநோக்கு சிந்தனை போராட்டக் குணம் இந்த இரண்டு தலைவர்களிடமும் வெகுவாக காணப்பட்டது.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றால் விடுதலைப் புலிகள் விரும்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டும் என அமிர்தலிங்கத்துக்கு நன்கு தெரியும்.

தான் தோற்றாலும் பரவாயில்லை தமிழ் மக்களுக்கு இந்தியாவின் அனுசரணையின்றி எந்த தீர்வும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட மாட்டாது என்ற சிந்தனை தூரநோக்கு அவரிடம் அன்றே காணப்பட்டது.

சிலர் 13 ஐ வேண்டாம் என்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தான் என கூறுகின்றனர்.

தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அடையும் வரை எமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எமக்குக் கிடைத்த பதின்மூன்றாவது திருத்தத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிமூன்றை எதிர்ப்போர்  சமஸ்டியை அடைவதற்கான வழிமுறைகளை தெளிவாகவும் நடைமுறை சாத்தியமாக முன் வைப்பதற்கு தயாரில்லை.

ஆகவே அமரர் அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியாவை நம்பிய நிலையில் அதனை தற்போதுள்ள தமிழ் தலைவர்களும் ஓரணியல் நின்று அடைவதற்கு முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,  ஜெபநேசன் அடிகளார் மற்றும் டான் குழுமத் தலைவர் குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply