பளையிலுள்ள LRC காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை- சிறீதரன் எம்.பி ஆளுநரிடம் கோரிக்கை…!samugammedia

கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் ஒருபகுதியையேனும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவிடயமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் இன்றையதினம் (28) வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள  LRC காணிகளுள் ஒருபகுதியை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் காணியற்ற நிலையில் வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக, தாங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் என்னால் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி காணிகள் தென்னிலங்கையின் தொழிலதிபர்களுக்கும், எமது மாவட்டத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கோடு இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கும் பகுதி பகுதியாகக் கூறுபோடப்படுவதை, கையாலாகாத்தனத்தோடு பார்த்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் தர்மக்கேணிப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் LRC காணி, புத்தளத்தைத் தளமாகக் கொண்ட ஓர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, அக்காணியின் துப்புரவுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.  

போரினாலும், இடப்பெயர்வுகளாலும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு இந்த மண்ணிலே மீளவும் குடியேறி, தமக்கென்றொரு நிலையான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு சொந்தக் காணியற்ற நிலையில் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும், காணிகளிலும் வாழவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நிர்க்கதியற்றிருக்கத்தக்கதாக, அரச காணிகளை தனவந்தர்களுக்கும், இந்த மாகாணத்தோடு எந்தத் தொடர்புகளுமற்றவர்களுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதென்பது, அல்லலுறும் எமது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகச்செயலாகவே அமையும் என்பதில் தாங்களும் கரிசனம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இதுதவிர, தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, எமது மக்களின் பூர்வீக நிலங்கள் மெல்லமெல்ல பறிபோகும் அபாயகரமான நடைமுறைச் சூழலொன்றின் பின்னணியில், நீண்டகாலமாக வெற்றுக் காணிகளாக உள்ள பச்சிலைப்பள்ளியின் LRC காணிகளுக்கும் அதேகதி ஏற்படாது என்பதற்கு எம்மிடம் எதுவித உத்தரவாதமும் இல்லாத நிலையில், குறித்த காணிகளின் ஒரு பகுதியையேனும் காணியற்ற எமது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கு ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.-என்றுள்ளது.
குருந்தூர்மலை பகுதியில் தொல் பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட மக்களினுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கள விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக கானிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (28) அரசியல் தலைமைகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர்

குருந்தூர் மலை பகுதியிலே 1933.05.12 அன்று வர்த்தமானி ஊடாக 78 ஏக்கர் 2 ரூட் 12 போர்ச்  காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்காக எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது குறித்த பகுதியில்  தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீக காணிகள் வயல் நிலங்கள் உள்ளடங்களாக மேலும் 306 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பதற்காக எல்லை கற்களை போட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மக்கள் தங்களது காணிகளை மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் கடந்த 16.8.2023 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது குறித்த பகுதியை நேரடியாக விஜயம் செய்து இது தொடர்பில் முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைய இன்றையதினம்(28) குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகம் க.கனகேஸ்வரன்  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி சி.குணபாலன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் உடைய மன்னார், வவுனியா ,முல்லைத்தீவு மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர் ஆர் டி ஜெயதிலக  மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் உடைய  அதிகாரிகள் நீர்ப்பாசன திணைகள அதிகாரிகள் கமநல சேவை திணைகள அதிகாரிகள் நில அளவைத் திணைகள  அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் துறை  சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று நேரடியாக குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்

இருப்பினும் குறித்த காணிகளில் விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் எந்தவிதமான சாதகமான பதில்களும் எட்டப்படாத நிலையில் இன்றைய அவதானிப்புகளின் அடிப்படையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி அதனூடாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அங்கு தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply