திருமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு…! எதிர்ப்புத் தெரிவித்து தொடரும் போராட்டம்…!samugammedia

திருகோணமலை- வெருகல் – நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் மூன்றாவது தடவையாகவும் (31)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெருகல் – நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மக்களுடைய உடைமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள்  இன்றைய தினமும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 27ம் திகதி மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அன்றைய தினம் மண் அகழ்வு தற்காலிகமாக கைவிடப்பட்டதோடு அன்றையதினம் (28.08.2023) இரவு 9.00 மணியளவில் மக்களை அச்சுறுத்தும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரண சங்கத் தலைவரான தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோர் ஈச்சிலம்பற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மறுநாள் (29.08.2023) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்  மேலும் சிலரை பொலிசார் தேடி வருவதாகவும் இவ்வாறான நிலையில் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிசார் கைது செய்வதாகவும், பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Leave a Reply