குருந்தூர் மலை விகாரை விவகாரம்…! நீதிமன்ற கட்டளையை மீறிய அரச அதிகாரியை பாதுகாக்கும் சிறிலங்கா அரசு…! சபா.குகதாஸ் குற்றச்சாட்டு..!samugammedia

குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தை அழித்து கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதி மன்றம் ஒன்றுக்கு மூன்று தடவைகள் கட்டளை பிறப்பித்துள்ளது. அதனை மீறி தொல்லியல் திணைக்களத்தின் அரச அதிகாரியான பணிப்பாளர் தூக்கி எறிந்து சட்டவிரோத விகாரையை கட்டி முடிக்க தீவிரமாக செயற்பட்டுள்ளார் இப்படியாக நீதிமன்ற கட்டளையை கையில் எடுத்து அவமதிப்பு செய்த அரச அதிகாரி யாரால் பாதுகாக்கப்படுகின்றார்? நீதித்துறை சுயாதீனத் தன்மையை இழந்துள்ளதா? அல்லது வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதியா? அல்லது ஒரு நாடு இரண்டு சட்டமா? இவ்வாறான பல கேள்விகள் நீதி கோரி நிற்கும்  மக்களிடம் எழுந்துள்ளன என வடக்கு மாகணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்கம் , நீதி, ஊழல்  பற்றி மேடைகளில் பேசும் நீதியமைச்சர் விஐயதாஸ ராஐபக்ச இப்படி ஒரு அநியாயத்தை கண்டு கொள்ளாதவர் போல நித்திரை கொள்வதன் நோக்கம் என்ன? இனவாதமா?

சாதாரண குடிமகன் சட்டத்தை மீறினால் பின்னி எடுக்கும் காவல்துறை கட்டளையை மீறியவர்களையும் அவர்கள் மீறுவதற்கு பாதுகாப்பு கொடுப்பதையும் பார்க்கும் போது ஐனாதிபதி நிலையான தீர்வு ,அபிவிருத்தி பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அரகல போராட்டத் தரப்பை  அடக்க இராணுவத்தை ஏவி விட்ட ஐனாதிபதி நீதிமன்ற கட்டளையை மீறி சட்டவிரோத நடவடிக்கைகளை ஈடுபடும் அதிகாரத் தரப்புக்களை தட்டிக் கேட்காமல் தண்டனை வழங்காமல்  இருப்பது பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதனாலா?

நீதிமன்ற கட்டளையை மதித்து நீதி வழங்க முடியாத அரசாங்கம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க மாட்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் இச் செயற்பாடுகள் நிரூபிக்கின்றன.

நாட்டின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் குறைந்த பச்ச கட்டளையையும் ஏற்றுக் கொள்ள அரச இயந்திரம் தயாராக இல்லை என்பதை  குருந்தூர் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply