பல பில்லியன் ரூபா பெறுமதியான வாகன இறக்குமதி மோசடி தொடர்பான விசாரணையில் நிதி அமைச்சின் அறிக்கைக்காக, அரசாங்கம் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை நிதியமைச்சு சமர்ப்பிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதித் தடைக்கு மத்தியிலும் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே நிதி அமைச்சினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுமார் 5,000 வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதன் மூலம் அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் மினி கூப்பர் கார் ஒன்று சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டபோதும், அந்த வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முச்சக்கர வண்டியாக பதிவு செய்யப்பட்டதை அமைச்சர் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்னும் ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.