சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான தமது 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தின் முதல் மதிப்பாய்வை மேற்கொள்ள உள்ளமையினால், இந்த மாதம் கடன் மறுசீரமைப்பில் பெரிய ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
வரிச் சட்டங்களைத் திருத்தும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டத் தடை நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியிள் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்தை இந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் நிறைவேற்றுவதற்கு அது அனுமதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் மன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து இந்த மாதம் உடன்பாடு எட்டப்படும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முடிவு எதிர்வரும் 10 முதல் 15 நாட்களில் சாத்தியமாகும் என தெற்காசிய பொருளாதார நிபுணரான சவுரவ் ஆனந்த்தும் தெரிவித்துள்ளதாக ப்ளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுமாயின் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.