சர்வதேச விசாரணைக்கு ரணில் தயாராம்- விஜயதாஸ ராஜபக்க்ஷ ! samugammedia

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள போதும் ஒரு தரப்பினர் அதற்குச் சாதகமான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. ஈஸ்டர் குண்டுத் தாக்குல் சம்பவத்தில் ஆளும், எதிர்த் தரப்பினர் முரண்பட்டுக் கொண்டால் ஒருபோதும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது. எனவே, ஆளும் – எதிர்த் தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினர்  முரண்பட்டுக்கொண்டால்  ஒருபோதும் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது .

குண்டுத் தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் நான் ஒரு தரப்பினரால் இனவாதியாகவும், இரத்தத்தைக் காண்பதற்கு ஆசை கொண்டுள்ள நபர் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.

நல்லாட்சி அரசின்போது நீதி அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு அடிப்படைவாதம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன்.

அதன் பின்னர் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். எமது அரசின் உறுப்பினர்களே என்னை விமர்சித்தார்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே சிறந்த முறையில் செயற்பட்டார்.

நீதி அமைச்சர் குறிப்பிட்ட  விடயத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் மாத்திரமே நடுநிலையுடன் கருத்துத் தெரிவித்தார்.

ஆனால், எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. என்னை விமர்சிப்பதை மாத்திரமே இலக்காகக்  கொண்டு அப்போதைய அரசு செயற்பட்டது. இறுதியில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஆனால், அதற்கு உரிய தரப்பினர் சாதகமான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. ஆகவே, குண்டுத்தாக்குதல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பிரச்சினையில்லை. அன்று தடுக்கக் கூடிய அழிவைத் தடுக்காத காரணத்தால்தான் பலர் உயிரிழந்தார்கள். ஆகவே, இந்த விடயத்தில் நாடாளுமன்றம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *