மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரத்தினபுரி, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளந்துரை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம்போல் இனி எங்கும் நடக்ககூடாது என்பதால்தான் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெள்ளந்துரை தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவி பல்கலைக்கழகம் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும், புலமைப்பரிசிலொன்றையும் வழங்கவுள்ளோம். அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனை நாம் எழுத்துமூலம் கோரியுள்ளோம்.
இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை. மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். மலையக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்,
ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என ஒரு அரசியல்வாதி கூறுகின்றார்.
இப்படியான பிரச்சினைகள் பற்றிபேசி தீர்வைக்காணவே ஜனாதிபதியுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்காமல் நடை பயணம் சென்றனர்.
ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதற்காக அனுசரித்து செல்கின்றோம். மக்களுக்காக பொறுமை காக்கின்றோம். எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மலையக அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும். சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்தார்.