ஹேவாஹெட்ட – ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, வயோதிபப் பெண் ஒருவரினுடையது என சந்தேகிக்கப்படும் சிதைவடைந்த தலையொன்று பயணப் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பயணப்பைக்கு அருகிலிருந்து கையின் ஒரு பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேவாஹெட்ட – ருக்வூட் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடந்த 6ஆம் திகதி ஹங்குரன்கெத்த காவல்நிலையத்துக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதலின்போது, மத்துரட்ட – ஓகந்தகல மலை பகுதியிலிருந்து தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் குறித்த சடலம் மீதான பிரேத பரிசோதனைகளில், சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர், குறித்த சடலத்தினுடையதென சந்தேகிக்கப்படும் தலை மற்றும் இடது கை சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காணாமல்போனதாக முறைப்பாடளிக்கப்பட்ட குறித்த வயோதிப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.