தேர்தல் வெற்றிக்காக உயிர்களைப் பலியெடுக்கும் ஒரு சமூகத்தை சுற்றி வாழ்வதையிட்டு வெட்கப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்
நேற்று (17) திருகோணமலை பகுதியில் தியாகதீபம் திலீபனின் ஊர்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது சிங்கள காடையர்கள் நடாத்திய தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அகிம்சை வழியில் போராடி உயிர்த் தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்த மறுப்பதும், நடுவீதியல் தாக்க முற்பட்டு கொலை செய்ய எத்தனிப்பதும் இந்த நாடு இன்னமும் இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை என்பதை உணர்த்துகின்றது. கடந்த காலங்களைப்போல் ஆட்சியாளர்களினதும், அரச இயந்திரங்களின் நேரடியானதும், மறைமுகமானதுமான கரங்கள் துணை நிற்பதும், வேடிக்கை பார்ப்பதும் நாம் அவதானிக்கின்ற விடயங்களாகும்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு எப்படி அழகாக திட்டமிட்டு, இனவாத திரியை எரிய வைத்து, பரவச் செய்து உயிர்களைப் பலியெடுத்து தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திய ஒரு கூட்டம் இந்த நாட்டில் வாழ்வதை நாம் கண்டோம். அதேபோன்று இன்னுமொரு தேர்தலுக்கு, இன்னுமொரு திரியை கொளுத்தி நாடு முழுவதும் இனவாத தீயைப் பரவச் செய்ய இன்னுமொரு கூட்டம் தயாராகின்றது. அதன் ஒரு அங்கமே கஜேந்திரன் மீதான தாக்குதலாகும்.
கேவலம் ஒரு தேர்தல் வெற்றிக்காக உயிர்களைப் பலியெடுக்கும் ஒரு சமூகத்தை சுற்றி வாழ்வதையிட்டு வெட்கப்படுகின்றோம். சிங்கள பேரினவாத, பௌத்த மேலாதிக்க மதவாத வெறியர்கள் தமது இலக்கை எட்டும்வரை சீண்டிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எமது மக்கள் இதுவிடயத்தில் மிகவும் அவதானமாக, விவேகத்துடன் செயற்படவேண்டும். அவர்களின் திட்டத்துக்கு பலிக்கடாவாகிவிடக் கூடாது.
திட்டமிட்டு தாக்குதல் மேற்கொண்ட காடையர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி. முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நேர்ந்த கதி இப்போதைய ஜனாதிபதி, பிரதமருக்கு ஏற்படக் கூடாது என நாம் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.