குளோபல் மிஸ் யூனிவர்ஸில் முதல் முறையாக பாகிஸ்தானிய அழகி!

இவ்வருடம் நடைபெறவுள்ள 72 ஆவது குளோபல் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில்` முதல் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த எரிகா ராபின் என்ற 24 வயதான அழகி பங்கேற்கவுள்ளார்.

இவர் அண்மையில் இடம்பெற்ற “மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்” போட்டியில் முதல் இடத்தை பெற்றதன் மூலம் இவ்வருடம் எல் சால்வடார் நாட்டில், நடைபெறவுள்ள  “குளோபல் மிஸ் யூனிவர்ஸ்” அழகிப்  போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து எரிகா கருத்துத் தெரிவிக்கையில் ”நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன்.

ஊடகங்கள் தெரிவிக்காத அழகான கலாச்சாரம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். பழகுவதற்கு அன்பானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பாகிஸ்தான் நாட்டின் ருசி மிக்க உணவு வகைகளை உண்டு மகிழவும், எங்கள் நாட்டின் இயற்கையழகையும், பனிமலைகளையும் மற்றும் வயல்வெளிகளையும் காணவும் அனைவரையும் அழைக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எரிகாவின் வெற்றியை “வெட்கக்கேடானது” என அந்நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், எரிகாவிற்கு ஆதரவாக பெண்ணுரிமைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *