சிங்கள கிராமத்தினூடாக திலீபனின் நினைவு ஊர்தி…! இனவாதத்தைத் தூண்டி மக்களை குழப்ப சூழ்ச்சி…! கம்பன்பில குற்றச்சாட்டு…!

கிழக்கில் சிங்களக் கிராமம் ஒன்றின் ஊடாக புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகனப் பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தைத் தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் திலீபனின் நினைவு ஊர்தி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். புலிகள் அமைப்பின் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் திலீபனின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வடக்குக்குப் பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்? எவரேனும் அதிகாரி அனுமதி வழங்கி இருப்பாரானால் அவர் நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாக மீறியவராகக் கருதப்படுவார்.

அதேபோல அதிகாரி களுக்கு அரசியல்வாதி எவரேனும் இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கியிருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும். புலிகள் அமைப்பு அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து 300 க்கும் மேற்பட்ட பயங்கர வாதத் தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும்.

புலிகளின் தாக்குதல்களால் தமது உறவுகளின் எவரேனும் ஒருவரை சிங்களச் சமூகம் இழந்திருக்கும். எனவே, அவ் வமைப்பு மீது சிங்கள மக்களுக்கு எதிர்ப்பு, வைராக்கியம், கோபம் இருப்பது இயல்பே.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவு கூர்ந்து, கிழக்கில் சிங்களக் கிராமம் ஒன்றின் ஊடாக வாகனப் பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தைத் தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும்.

மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்து செயற்பட்டதில் தவறு இருக்கலாம். ஆனால், மக்களைக் குழப்பும் வகையில் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிலிருந்தே சட்டம் செயற்படத் தொடங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *