பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் Online Safety Commission எனப்படுகின்ற நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலத்தின் பிரகாரம், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களது பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.
மேலும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.