திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (20) மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மூதூர் பாலநகர்ச் சந்தியில் இருந்து கையில் பதாதைகளை தாங்கியவாறும் எதிர்ப்புக் கோஷங்களை வெளிப்படுத்தியவாறும் புளியடிச் சந்தி மணிக்கூட்டு கோபுரம்வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்றும் இந்த விடயத்தில் சர்வதேச சமூகமும் அக்கறையுடன் செயற்ப்படவும் வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் 56 ல் இலங்கையா? எம் இனத்துக்காக மரணித்தவர்களை நினைவுகூற அனுமதி கொடு , பாரததேசம் மட்டுமல்ல சர்வதேசத்திற்கே அகிம்சையை போதித்த பெரும் மகான் தியாக தீபம் திலீபன், போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.