7வது நாளாக தொடரும் மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்…!samugammedia

கடந்த 7 ஆவது தினங்களாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் எங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கால் நடை பண்ணையாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர்.ஒரு நாளைக்கு சுமார் 3000 லீற்றர் வரையான பால் அரச தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம்.தற்போது அவ்வளவு பொருளாதாரமும் இழந்த நிலையில் வீதி ஓரத்திற்கு வந்து வாழ்வாதாரத்தை இழந்து நீதி வேண்டி போராடி வருகிறோம்.என்று மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 7 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது.

பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இவ் சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் சங்கத் தலைவர் சீனித்தம்பி நிமலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தாங்கள் மயிலத்தமடு மாதவனை பகுதியில் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த பல வருடங்களாக பல்வேறுபட்ட அரசியல் பிரமுகர்கள்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தியும் இதுவரையும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.இவ்வாறு நாங்கள் வீதியில் குந்தி இருந்தால் எங்களது குடும்ப வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் நிலமை எவ்வாறு எதிர்காலத்தில் இடம்பெறப்போகிறது என்று எண்ணிப்பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, யாரும் எங்களை கவனிப்பதாகவில்லை.அரசாங்க அதிபரும் சமூகம் தந்து எங்களுடன் கலந்துரையாடவில்லை.இன்றும் வரவில்லை. இனி யாரை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது என்று புரியவில்லை.

நாங்கள் யாரிடம் போவோம். எல்லாரிடமும் கையேந்திய நிலையில்தான் இறுதியில் வீதிக்கு வந்துள்ளோம்.இது தொடருமானால் எங்களது வாழ்வாதாரமும் அழிந்து எல்லாம் அழியும் நிலை ஏற்படும்.

இன்னும் ஒரு சில தினங்களில் விதைப்பு வேலைகள் ஆரம்பித்தால் பண்ணையாளர்களுக்கும் அப்பகுதி நில ஆக்கிரமிப்பு விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும்.

அது பின்னர் கைகலப்பில் முடியும். எங்களது கால்நடைகளை சுடுவார்கள்.இது நிச்சயம் நடக்கும்.இதனை பொலிசாரோ,இராணுவமோ,யாரும் கவனிக்காது.முறைப்பாடு பதிவு செய்வதால் எந்தவித பலனும் இல்லை.

வாழ விடுவதென்றால் வாழவிடுங்கள் சாகவிடுவதென்றால் எங்களை சாகவிடுங்கள் என்பதுதான் எங்களது இறுதி தீர்மானமாகும்.என்று தங்களது நிலமைகள் தொடர்பாக உருக்கமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *