தியாக தீபம் திலீபனின் தியாகத்தை உங்கள் அரசியல் நோக்கங்களுக்காக கொச்சைப்படுத்தாதீர்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரான பிரபா கணேசன் தமிழ் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாகி திலீபனின் தியாகத்தை தமிழ் சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள் . அகிம்சை வழியில் உயிர் நீத்த அவரின் தியாகத்தை இன்றைய அரசியல்வாதிகள் கையிலெடுத்து அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவும் திலீபனின் நினைவு நாளை கையிலெடுத்து சிங்கள தமிழ் மக்களிடையே பாரிய இனவாத பிரச்சனையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டள்ளார்.
திலீபனின் தியாகத்தில் ஒரு சதவீதத்தை கூட இந்த அரசியல்வாதிகளால் செய்ய முடியாது . சர்வதேசத்தின் மூலமாகவோ அல்லது உள்நாட்டிலுமோ பிரச்சனைகளுக்கான தீர்வினை காண்பதற்கு கூட இவர்கள் முயற்சிக்கவில்லை . மாறாக தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர்களிற்கு திலீபன் பற்றி தெரியப்படுத்துவதற்காக நினைவு ஊர்தி நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள், அதற்கு சமூக ஊடகங்களிலோ அல்லது திலீபன் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டோ செய்திருக்கலாம். ஆனால் அவர்க்ளின் இவ்வாறான நடவடிக்கை பாரிய பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபத்தை தேடிக்கொண்டு தமது கட்சியை வளர்க்க முயற்சிக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கட்சியை வளர்ப்பதற்கும் பாராளுமன்ற பிரதிநித்துவத்திற்காகவும் இன ஒற்றுமையை குலைத்துவிட வேண்டாம் என்று தமிழ் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அத்தோடு இவர்களின் இத்தகைய செயற்பாடானது இனரீதியான பிரச்சனையை ஏற்படுத்தி தென்னிலங்கை இனவாதிகளான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர ஆகியோருக்கு சிங்கள இனவாதத்தை கக்குவதற்கு இடமளிப்பதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை கஜேந்திரவனை தாக்கியதை கண்டிப்பதோடு , நீதியை கையிலெடுக்க இடமளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டவர்கள் கைது செய்யபட்டாலும் இதற்கு காரணமானவர் ஜெனிவாவில் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கள தலைவர்களிடையே தான் இனவாதம் காணப்படுகின்றது. சிங்கள மக்களிடம் இனவாதம் குறைவடைந்து இருக்கிறது. சிங்கள இளைஞர்கள் மத்தியில் திலீபனின் தியாகம் வரவேற்பை பெற்று இருக்கிறது . இவ்வாறிருக்கையில் தமிழ் இனவாதத்தை மேற்கொள்ளும் அரசியல் வாதிகளினுடாக இனவாதம் தூண்டப்படுமே தவிர பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது என்றார்.
புலம்பெயர்ந்தவர்கள் அமைதியான முறையில் இந்த நாட்டிற்கு வந்து செல்ல தயாராக இருக்கின்ற நேரத்தில் அரசியல் இலாபம் தேடி இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் கஜேந்திரன் போன்ற அரசியல் வாதிகளையும் இனவாத புலம்பெயர்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.