சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன் போது அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் இலாபத்துக்காக மாற்றுவதற்கு கீழ்த்தரமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2001 – 2004 காலத்தைப் போன்றும் 2015 காலத்தைப் போன்றும் புலனாய்வுத்துறையை வீழ்ச்சியடையச் செய்து இராணுவத்தினரைப் பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்துக்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.
அரசைத் தாக்குவதாகக் கூறி எமது இராணுவத்தினரைத் தாக்குவதற்கு இடமளிக்க முடியாது. எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால் சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் விசாரணை அமைப்பு இங்கே வந்தது, ஆஸ்திரேலிவின் பொலிஸ் வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம். இதேவேளை, இந்தப் பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே பிரிவினை வாதத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.” – என்றார்.