திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம்(21) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை சேருவில காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் அவருடன் சென்ற சக நண்பரை வீட்டுக்கு முன் இறக்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சக நண்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் அதே பகுதியில் வசித்து வரும் குலங்கமுவே கெதர குலரத்ண (56வயது) என்பவரை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச். குணரத்ன சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருவில பொலிஸார் தெரிவித்தனர்.