திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இச்சம்பவம் இன்று (22) இடம் பெற்றுள்ளது.
இதன் போது கன்னியா- கிளிகுஞ்சுமலை நான்காவது ஒழுங்கையில் வசித்து வரும் சிவசுப்பிரமணியம் சத்தியவாசன் (22 வயது) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் வீட்டில் இருந்து 2.40 மணியளவில் வீரியால் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஆனாலும் குறித்த சுட்டு சம்பவம் யாரினால் நடாத்தப்பட்டது பற்றிய விபரம் தெரியவில்லை எனவும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இருந்த போதிலும் குறித்த பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதினால் குரங்குக்கு வைக்கப்பட்ட சூடு குறித்த இளைஞருக்கு பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.