ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சீனாவிலும் இந்தியாவிலும் நீர்மின்னாற்றல் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருப்பது இதற்கு முக்கியக் காரணம். ஆசியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் ஏறத்தாழ முக்கால் பகுதி இவ்விரு நாடுகளிலும் உற்பத்தியாகிறது.
மேலும் அதிகரித்துவரும் மின்சாரப் பயன்பாட்டுக்கு இடையே, நீர்மின்னாற்றல் உற்பத்தி குறைவாக இருப்பதால் புதைபடிம எரிபொருள்கள் மீதான சார்புநிலை அதிகரித்துள்ளது.
ஆசியாவில் நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் 17.9 விழுக்காடு குறைந்ததாக எம்பர் எனும் எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதே வேளையில், புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
“ஆசிய வட்டாரத்தில் சூரிய ஒளியையும் காற்றையும் பயன்படுத்தும் மின்சார உற்பத்தியில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தி ஆலைகளின் விநியோகமும் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
நீர்மின்னாற்றலின் அளவு வெகுவாகக் குறைந்திருப்பது இதற்குக் காரணம்,” என்று ரிஸ்டாட் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார, எரிவாயுச் சந்தைப் பிரிவு இயக்குநர் கார்லோஸ் டொரஸ் டியாஸ் கூறினார்.
“நீண்டநாள் நீடிக்கும் கடுமையான வெப்பத்தால் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்துபோனது. அதனால் மின்சாரத் தேவையை நிறைவேற்ற மாற்றுவழிகள் தேவைப்பட்டன,” என்றார் அவர்.
ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த எட்டு மாதங்களில், நீர்மின்னாற்றல் உற்பத்தி சீனாவில் 15.9 விழுக்காடும் இந்தியாவில் 6.2 விழுக்காடும் குறைந்தது.
இதனை ஈடுசெய்ய, புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டை சீனா 6.1 விழுக்காடும் இந்தியா 12.4 விழுக்காடும் கூட்டின.
நீர் மின்னாற்றல் உற்பத்தி வியட்னாம், பிலிப்பீன்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் குறைந்ததாக எம்பர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வறட்சியான பருவநிலையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.