’13ஆம் திருத்தச் சட்டம் அதிகாரம் குறைந்த ஒன்று. அதுவும் இந்தியாவின் அனுசரணையின் பேரில் கிடைத்ததைத்கூட அரசாங்கங்கள் தட்டிக் கழித்து கொண்டு வருவார்களேயானால் திரும்பவும் பிரபாகரன் ஒருவரைக் கூட்டிக் கொண்டு வரவவேண்டியது தான். வேறு வழி இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதிருக்கும் 13ஆவது திருத்தச் சட் டம் இந்தியாவின் அனுசரணையுடன் வந்தது. இப்போது அதை விடுத்து புதிய அரசியல் யாப்புக்கு சென்றால் அதில் இந்தியாவின் அனுசரணை இருக்காது. ஏனெனில், அதற்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை.
இப்போது இருக்கும் 13இற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவேதான் நாங்கள் இந்தியாவின் அனுசரணையை நடவடிக்கையை அதன் உள்ளீடுகளை – நெருக்கடிகளை வேண்டி நடவடிக்கை எடுத்தால் என்ன என்ற கேள்வியை எங்களுடைய தலை வர்களுக்கு விடுத்திருந்தேன்.
13 கிடைக்காவிட்டால் அடுத்த கட்டம் என்னவென்று கேட்கிறீர்கள். 13 கிடைக்காவிடின் இவர்களிடம் இருந்து அடுத்து என்ன கிடைக்கப் போகின்றது. 13ஐயே மிகவும் குறைந்த ஒன்று அதே கிடைக்கவில்லை. அதுவும் இந்தியாவின் அனுசரணையின் பேரில் கிடைத்த ஒன்று அதைக்கூட அவர்கள் தட்டிக் கழித்து கொண்டு வருவார்களேயானால், திரும்பவும் பிரபாகரன் ஒருவரைக் கூட் டிக் கொண்டு வரவேண்டியதுதான். வேறு என்ன வழி எங்களுக்கு இருக்கிறது?எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேவேளை, எல்லோரும் சொல்கிறார்கள் வெளிநாடுகளிடம் (சர்வதேசம்) போகலாம் என்று. ஆனால், அவர்கள் (சர்வதேசம்) தமிழீழத்தை தூக்கி தருவார்கள் என்று யோசிக்கக்கூடாது. எங்களுடைய பிரச்னைகளை நாங்களே தீர்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை 13ஐ எப்படியாவது நடைமுறைப்படுத்தி மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுத்து அந்த அதிகாரத்தின் மூலம், அடுத்தடுத்த கட்டத்துக்கு போகும் நிலையை உருவாக்குவதுதான்.
13ஆவது திருத்தச் சட்டம் அதிகாரம் இல்லாத ஒன்று. அதைக் காட்டி அதிகாரம் இல்லாததால் சமஷ்டியை கேட்கிறோம் என்று உலக அரசுகளுக்கு சொல்லமுடியும். அப்போது அவர்களும் ஏதாவது செய்ய முடியும்.
சிலர் சொல்கின்றனர் 13 என்று சொன்னால் சமஷ்டி கோரிக்கை நீர்த்துப் போய்விடும் என்று. அப்படி நீர்த்துப் போகாது. ஏனெனில், மாகாண சபை வந்தவுடன் நீர்த்துப் போயிருக்க வேண்டும். இப்போது அந்தக் குரல் வலுவாகியிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.