கட்டட நிர்மாண துறையில் ஈடுபட்டுள்ளோரின் நிதி பிரச்சனைக்கு தீர்வு! samugammedia

கட்டட நிர்மாண துறையில் ஈடுபட்டுள்ளோர் நீண்ட காலமாக எதிர்கொண்டிருந்த நிதி பிரச்சனைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் தீர்வு ஏற்படும் என இலங்கை நிர்மாண அமைப்பின் தலைவர் ரொஹான் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார பின்னடைவினை அடுத்து இடைநிறுத்தப்பட்ட நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய நாடளாவிய ரீதியாக தடைப்பட்டிருந்த நிர்மாணப் பணி திட்டங்களில் 40 முதல் 60 சதவீதமானவை ஆரம்பக்கப்படவுள்ளன.

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இலங்கை நிர்மாணத்துறை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நிர்மாண எக்ஸ்போ 2024” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் உறுப்பினர் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக வழங்கப்பட வேண்டியிருந்த 240 பில்லியன் ரூபாவில் தற்போது, 60 பில்லியன் ரூபா மட்டுமே நிலுவையில் உள்ளது.

தற்போது, ஏராளமானவர்கள் பல திட்டங்களை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியினை கோரியுள்ளனர்.

இது தவிர, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் நிர்மாண பணிகளுக்கான செலவீனம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் உட்பட பல அயல் நாடுகளின் நிர்மாண செலவீனம் குறைவானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையை சீர்செய்வதற்கான முயற்சிகளில் தமது அமைப்பு அதிக கவனத்தை செலுத்துவதாகவும் இலங்கை நிர்மாண அமைப்பின் தலைவர் ரொஹான் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply