ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குக் கடந்த செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வந்த வேளை அவருக்கு எதிராகத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பிக்கள் உட்பட 30 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் உத்தரவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்குத் தான் வழங்குவார் எனத் தெரிவித்து, அந்தத் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த ஏறாவூர் நீதிவான், எதிராளிகள் அனைவரையும் கைது மற்றும் பிணையில் விடுவித்தல் போன்ற நடவடிக்கை எதற்கும் உட்படுத்தாமல் விடுவித்தார்.
இந்த விடயத்தில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கையைப் பொலிஸார் ஆரம்பத்தில் முன்னெடுத்தனர். எனினும், இரா.சாணக்கியன் எம்.பி. உட்பட ஐவரைத் தவிர்த்து 30 பேருக்கு எதிராகவே இப்போது வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையை எதிர்த்து நீதிமன்றத்தின் கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கும் மற்றும் மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைகழக மாணவர்கள் அறுவருக்கும் எதிராகத் தொடரப்பட்ட இரு வழக்குகளும் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி, ஒரு ஊடகவியலாளர் மற்றும் பண்ணையாளர்கள உட்பட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் அன்வர் சதாக் முன்னிலையில் 29 பேர் இன்று முன்னிலையான நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது இவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத், சட்டத்தரணிகளான சின்னாத்துரை ஜெகன், மயூரி ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
ஆர்ப்பாட்டத்தை அறிக்கை செய்யும் கடமையில் ஈடுபட்ட ஊடகவியலாளருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை மூலம் பொலிஸார் மிகக் கேவலமாகச் செயற்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், நீதிவானுக்குச் சுட்டிகாட்டினார்.
அரசியல் ரீதியில் ஒன்று கூடி அமைதியாக எதிர்ப்புத் தெரிவிப்பது பிரஜைகளுக்கு அரசமைப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை. அதை மறுத்து இந்த வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்று சுமந்திரன் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிவான் எதிராளிகளுக்குப் பிணை தேவையில்லை எனக் குறிப்பிட்டு, வழக்கை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன் இன்றைய வழக்கு விசாரணைக்கு வராத ஒருவருக்கு அழைப்பாணை வழங்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, கடந்த 5ஆம் திகதி பண்ணையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைகழக மாணவர்கள் 6 பேரைக் கைது செய்து பிணையில் விடுவித்த வழக்கு அதே நீதிமன்றில் இன்று எடுக்கப்பட்ட நிலையில் அதனையும் ஜனவரி 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அந்த வழக்கிலும் சுமந்திரன் அணியினர் முன்னிலையாகி மாணவர்களுக்காக வாதிட்டனர்.