மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்ட வாதத்தையடுத்து நிராகரிப்பு!samugammedia

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும் கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சமர்ப்பித்த விண்ணப்பங்களை நீதிமன்றம் இன்று நிராகரித்துக் கட்டளை வழங்கியது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடத்திய நீண்ட சட்டவாதத்தை அடுத்தே இந்த நிராகரிப்புக் கட்டளையை நீதிவான் வழங்கினார்.

”உயிரிழந்த ஒருவருக்காக நினைவேந்தும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அது அடிப்படை உரிமையும் கூட. அதை மறுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது. மாறாக, அந்த உரிமை நிலை நாட்டப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று சாரப்பட நீண்ட சட்டவாதத்தை சுமந்திரன் நிகழ்த்தினார்.

அதையடுத்து பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் கட்டளையை நீதிவான் வழங்கினார்.

வேறு ஒரு வழக்குக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சுமந்திரன் பிரசன்னமாகி இருந்த தருணத்திலேயே பொலிஸாரின் இந்த விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

விடயத்தை அவதானித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தானாக எழுந்து தடை விதிக்கக் கோரப்பட்ட பிரமுகர்கள் சார்பில் தாம் முன்னிலையாகிப் பதில் வாதம் செய்ய விரும்புகின்றார் என விண்ணப்பம் செய்தார். அச்சமயம் மன்றில் பிரசன்னமாகியிருந்த பெரும் எண்ணிக்கையான தமிழ்ச் சட்டத்தரணிகள் தாங்களும் சுமந்திரனுக்கு அனுசரணையாகப் பிரசன்னமாகின்றனர் எனப் பதிவு செய்தனர்.

மட்டக்களப்பு பொலிஸாரின் விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதையடுத்து கொக்கட்டிசோலை பொலிஸாரின் விண்ணப்பம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னைய வழக்கின் காரணங்களின் அடிப்படையில் இந்த விண்ணப்பமும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *