மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு என மன்னாரிலுள்ள நலன்புரிச் சங்கமொன்றினால் இசை நிகழ்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக விளம்பரங்கள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பில் பல்வேறு ஆதாரபூர்வமாக உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது
குறிப்பாக மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்புக்களை சந்தித்து தாங்கள் கலந்துரையாடியதாகவும் மாவட்ட அரசாங்க அதிபருடன் மாற்றுதிறனாளிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் மன்னாரிலுள்ள நலன்புரிச் சங்கமொன்றின் தலைவர் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று வருடங்களாக (2021,2022.2023) மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் எந்த ஒரு கலந்துரையாடலும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட செயலகம் தகவல் வழங்கியுள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் தங்களிடம் எந்த புலம்பெயர் நாடுகளை சேர்ந்த அமைப்புக்களோ, அமைப்புக்களின் தலைவர்களோ தெரிவிக்கவில்லை எனவும் குறித்த இசை நிகழ்ச்சிக்கும் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்பான தேனீ அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த அமைப்பினரின் இசை நிகழ்ச்சி தொடர்பிலும் அவர்களின் நிதி சேகரிப்பு தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன
குறிப்பாக அண்மைகாலங்களில் புலம்பெயர்நாடுகளில்,போரினால் பாதிக்கப்பட்ட மக்களை, மாவீரர் தினத்தை, மாவீரர் குடும்பங்களை, மாற்றுத்திறனாளிகளை காரணம் காட்டி பல்வேறு அமைப்புக்கள் நிதி சேகரித்து மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் குறித்த அமைப்பிடம் விளக்கம் கோரிய நிலையில் குறித்த அமைப்பினால் எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை
அதே நேரம் குறித்த இசை நிகழ்ச்சிக்கு என மன்னார் மாவட்டத்தில் முன்னதாகவே மாற்றுத் திறனாளி அமைப்பு என்ற பெயரில் பல்வேறு நிதி மோசடி விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ள நபர் ஒருவரையும் குறித்த அமைப்பு லண்டனுக்கு அழைத்து கெளரவிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சி தொடர்பிலும் குறித்த நிகழ்சியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் நபர் தொடர்பிலும் பல்வேறு தகவல் கோரிக்கைகள் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் குறித்த கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதை தாமதித்து வருவதுடன் அவருக்கும் குறித்த அமைப்பின் செயற்பாடுகளில் தொடர்பு இருக்கின்றதா என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் குறித்த நிகழ்சி தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.