விமர்சித்து அரசியல் செய்பவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு! samugammedia

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும், ஆறுமுகன் தொண்டமானையும் விமர்சித்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று ஜீவன் தொண்டமானை விமர்சித்து அரசியல் செய்கின்றனர். அவர்களின் அரசியல் அதுதான். அப்படியானவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம்200 நிகழ்வை நடத்தினோம், ஆனால் அதையும் வைத்து அரசியல் செய்வதற்கே சிலர் முற்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (18.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு,  வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கொரோனா அதன் பின்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டன. மலையக வீடமைப்பு திட்டமும் இடைநிறுத்தப்பட்டது. ஆனால் எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சு பொறுப்பை ஏற்று 8 மாதங்களுக்குள் வீடமைப்பு திட்டமொன்று முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல வீட்டு திட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளன. வெறுமனே வீடுகளை மட்டும் கையளிப்பது எமது எதிர்பார்ப்பு அல்ல. குடிநீர், மின்சாரம், உட்கட்கட்டமைப்பு என அனைத்து வசதிகளுடனும் முழுமைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டத்தை மக்களிடம் கையளிப்பதே நோக்கமாகும்.

அமைச்சு பதவியை ஜீவன் தொண்டமான் பொறுப்பேற்றபோது ஒன்றுமே செய்யமாட்டார் என்றார்கள். ஆனால் அவர் குறுகிய காலத்துக்குள் சிறப்பாக சேவைகளை செய்துகாட்டியுள்ளார். இதனால் அரசுக்கு அரசியல் ரீதியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதனால்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அன்று காங்கிரஸையும் ஆறுமுகன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் செய்தனர். இன்று ஜீவன் தொண்டமானை விமர்சிக்கின்றனர். இதைதவிர அவர்களுக்கு வேறு அரசியல் இல்லை என்பது எமக்கு தெரியும்.

முன்னர் ஒரு வீட்டை அமைப்பதற்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டது. தற்போது 29 லட்சம்வரை செலவாகின்றது. அதனை அமைச்சர் பெற்றுக்கொடுத்துள்ளார். வழமையாக ஒதுக்கப்படும் நிதியைவிட எமது அமைச்சரின் அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் சிலருக்கு பொறாமையாக உள்ளது. அந்த பொறாமையின் வெளிப்பாடே போலித்தனமான விமர்சனங்களாகும்.” – என்றார். 

Leave a Reply