வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம்…!samugammedia

வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (21) நடைபெற்றது.

இலங்கை முதலீட்டு சபையின்  வலய முகாமைத்துவ நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டி.லோரன்ஸ், காணி, உள்ளுராட்சி திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளும், சுற்றுலாத்துறை ஒன்றியத்தினரும், வர்த்தக பிரமுகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் காணப்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் முதலீட்டு ஊக்குவிப்புகளை மேற்கொள்ள முடியும் என இதன்போது வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிட்டார்.

இந்நிலையில் வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுவதாக இலங்கை முதலீட்டுச் சபையின்  வலய முகாமைத்துவ பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிக்க தயார் எனவும், இதற்கு ஆளுநரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இலங்கை முதலீட்டு சபையின்  வலய முகாமைத்துவ நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *