உகண மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (01) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண – 21, திஸ்ஸபுர கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உகண பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இருந்தபடியே சந்தேக நபர் தனது போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை இயக்கி வந்துள்ளார். தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் மற்றும் விசேட ஒளிவிளக்குகளை பொருத்தி, பொலிஸாரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸார் சோதனைக்காக வரும்போதெல்லாம், முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் அவர் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டது. அதன்படி, அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் குழுவினர், தங்களை “டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்” என மாறுவேடமிட்டு சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். குழுவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி வீட்டின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தபோது, சந்தேக நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களின் நடவடிக்கையை திசைதிருப்ப முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் திடீரென நடவடிக்கையில் ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது, தன்னை விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முயன்றதாகவும், அதனை பொலிஸார் நிராகரித்து சட்டநடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேக நபர் அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையிலும், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





