மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்குக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தியமையுடன், அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
ஏற்கனவே அன்னாரது மறைவையொட்டி இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசியல் ரீதியாக மாறுபட்ட நிலைப்பாடுகள் நிலவிய போதிலும், தனிப்பட்ட ரீதியில் அவருடன் கொண்டிருந்த நட்பு மிகவும் ஆழமானது என்றும், கொள்கைகளுக்காக இறுதிவரை சமரசமின்றிப் போராடிய ஒரு துணிச்சலான ஆளுமையை நாடு இழந்து நிற்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




