சமத்துவமும் சோசலிசமும் கனவு கண்ட தோழர் – க. பத்மநாபா- “சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை ஏற்காத மனிதர்” – சிறப்புக் கட்டுரை

வி.ரி. சகாதேவராஜா

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியி(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் இன்று (19-11-2026) வியாழக்கிழமை ஆகும்.

1951 நவம்பர் 19இல் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கந்தசாமி பத்மநாபா. தோழர்களால் ‘நாபா’, ‘ரஞ்சன்’ என அன்போடு அழைக்கப்பட்டவர்.

1960களில் யாழ்ப்பாணத்தில் வெடித்த சாதி ஒழிப்புப் போராட்டமே அவரை முதலில் பாதித்தது. வேளாளர் குடும்பத்தில் பிறந்தும், சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை. பின்னர் தரப்படுத்தல், 1972 அரசியலமைப்பு, 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை ஆகியன அவரை தமிழ் மாணவர் கூட்டமைப்பின் பக்கம் கொண்டு வந்தன.

1974-75இல் ஈழ விடுதலை இயக்கம், பின்னர் EROS எனப் பயணித்த அவர், 1981இல் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து EPRLFஐ உருவாக்கினார்.

EPRLF மற்ற இயக்கங்களில் இருந்து வேறுபட்டது. அது வெறும் ஆயுதப் போராட்ட இயக்கமாக மட்டும் இருக்கவில்லை. மார்க்சிய – லெனினிய வழியில், தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையையும் இணைத்த இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியது.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, உழைக்கும் மக்களின் உரிமை, மலையகத் தமிழர் – முஸ்லிம் – சிங்கள உழைக்கும் மக்களுடன் ஒற்றுமை என்பவையே பத்மநாபாவின் அரசியல். அதற்காகவே கிராமிய தொழிலாளர் – விவசாயிகள் முன்னணி, ஈழ பெண்கள் விடுதலை முன்னணி, மீனவ தொழிலாளர் முன்னணி போன்ற வெகுஜன அமைப்புகளை உருவாக்கினார்.

1977 கலவரத்தால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்காகவும், 1978 சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்காகவும் அவர் செய்த புனர்வாழ்வுப் பணிகள் இன்றும் கிழக்கில் நினைவுகூரப்படுகின்றன. பிராந்தியவாதத்தை அவர் எப்போதும் எதிர்த்தார்.

1988இல் அமைந்த வட-கிழக்கு மாகாண சபையில் EPRLF ஆட்சியமைத்தது. வரதராஜ பெருமாள் முதலமைச்சரானார். ஆனால் அந்த ஆட்சி நீடிக்கவில்லை. 1990 மார்ச் 1இல் சுதந்திர ஈழப் பிரகடனத்தைத் தொடர்ந்து தலைமை இந்தியாவுக்குச் சென்றது.

1990 ஜூன் 19இல் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த தாக்குதலில் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் கொல்லப்பட்டனர். அவருக்கு அப்போது வயது 38 மட்டுமே.

பத்மநாபா கொல்லப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர் எழுப்பிய கேள்வி இன்னும் உயிரோடு இருக்கிறது. விடுதலை என்பது வெறும் அதிகார மாற்றமா? அல்லது சாதி, வர்க்கம், பால் பேதம் அற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதா?

அதனால்தான் 75வது அகவையிலும் தோழர் பத்மநாபா வெறும் கடந்த காலத் தலைவராக அல்லாமல், ஒரு சிந்தனையாளராக நினைவுகூரப்படுகிறார்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு  நிருபர்

Leave a Reply