வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறப் பூச்சுப் பூசி, அவற்றைப் போலி லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றியதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா – கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக வர்ணம் பூசப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய சிலிண்டர்களைப் போன்று காண்பிப்பதற்காக சந்தேகநபர்கள் நூதனமான முறையைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சிலிண்டர்கள் பழையவை மற்றும் பயன்படுத்தப்பட்டவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அப்பம் தயாரிக்கும் மாவு, மிளகாய்க் குழம்பு உள்ளிட்ட உணவுக் கழிவுகள் மற்றும் உணவுத் துகள்களை அவற்றின் மீது பூசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு போலி லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




