எல்-நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் வறட்சி நிலைமை ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களுக்கு அமைய, எல்-நினோ நிலைமை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அதன் உச்சக்கட்டத்தை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவிய கடும் மழையுடனான காலநிலைக்கு எல்-நினோ நிலைமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலைமை டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சுற்றாடல் திணைக்களங்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்-நினோ நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் விவசாய அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினருக்கு சுற்றாடல் அமைச்சு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, வறட்சியினால் விவசாய விளைச்சலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவாறு எதிர்வரும் விவசாயப் பயிர்ச்செய்கைத் திட்டங்களை மாற்றியமைத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




