‘சேற்றைத் தழுவிய விவசாயி’ நூல் வெளியீடு!

சம்மாந்துறையைச் சேர்ந்த வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர் ஹமீட் முஹம்மட் அஸ்பாக் எழுதிய ‘சேற்றைத் தழுவிய விவசாயி’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 14ஆம் திகதி வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் பல்நோக்கு மண்டபத்தில் முற்பகல் 9 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரத்தினம் கமலக்குமார் தலைமை தாங்கினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எந்திரி ச. சர்வராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், விவசாயத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

விவசாயத்தின் முக்கியத்துவம், நெற்செய்கையின் அடிப்படை அம்சங்கள் மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மண்ணின் பண்புகள், நெல் உற்பத்தி, இலங்கையின் நெல் உற்பத்தி முறைகள், பாரம்பரிய மற்றும் நவீன நெல் வகைகள், இயற்கை உரங்களின் பயன்பாடு, விதைத் தெரிவு, நாற்றுமேடை தயாரித்தல், நெல் நடுகை, களை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு, நீர் முகாமைத்துவம், உரமிடுதல், அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின்னரான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

‘சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கை வைக்க முடியும்’ என்ற முதுமொழியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், விவசாயத்தின் அருமையையும் நெற்செய்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

மேலும், நெல் உற்பத்தியில் காணப்படும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள், விவசாயத்தில் நிலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நெல் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply