திருகோணமலை மாவட்டத்தில் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு ஆறு புதிய டொயோட்டா லேண்ட் குரோசர் சிங்கிள் கெப் ( Land Cruiser Single Cab) வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாகனங்களை வழங்கும் நிகழ்வு இன்று (25) திருகோணமலை வனஜீவராசிகள் வலய அலுவலகத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சாமிக்க தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,
காட்டு யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. வனவிலங்கு பாதுகாப்பு என்பது விலங்குகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையைப் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் அரசாங்கம் உணர்ந்துள்ளது. வனவிலங்குகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் ஊடாக மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த முடியும்.
இதற்கு முன்னர் வாகன இறக்குமதி என்றால் அது அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது நாட்டுக்காகவும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும் வாகனங்கள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், காட்டு யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் வனவிலங்கு தொடர்பான அவசரச் சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் எனவும் நம்புகிறேன்.
குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ, கந்தளாய், சேருவில மற்றும் திருகோணமலை ஆகிய ஆறு பிரதேச வனஜீவராசிகள் அலுவலகங்களுக்கே இவ்வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



