கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் கடல் மீன் உற்பத்தி 19 சதவீதத்தாலும், ஒட்டுமொத்த மீன்பிடித்துறை 19.1 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று (27) உரையாற்றிய அவர், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித்துறையின் பங்களிப்பு 2023ஆம் ஆண்டில் 1.1 சதவீதமாகவும், 2024ஆம் ஆண்டில் 1 சதவீதமாகவும், 2025ஆம் ஆண்டில் 0.9 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டில் மீன் மற்றும் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 307.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதுடன், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 180.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சுமார் 27 இலட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மீன்பிடித்துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11,700 மில்லியன் ரூபா போதுமானதல்ல என்றும், அந்த ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மீனவர்களின் ஓய்வூதிய நிலுவைகள், எரிபொருள் மானியம், மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம், இந்திய இழுவைப் படகுகளால் ஏற்படும் பாதிப்புகள், மீன்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கான குளிரூட்டல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 27,950 கடல் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்வதாகவும், அங்கு 30,955 செயற்படு மீனவர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மாவட்டத்தின் மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
1965ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கொட்பே மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்துவதுடன், சல்லி, சம்பூர் மற்றும் இலங்கைத் துறைமுகத்துவாரம் ஆகிய பகுதிகளில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க வேண்டும் எனக் கோரினார்.
அத்துடன், தென்னமரவடி, புல்மோட்டை, குச்சவெளி, இறக்கக்கண்டி, கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட மீன்பிடிக் கிராமங்களில் பாதுகாப்பான படகு நங்கூரத் தளங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கட்டுப்படுத்துதல், கரைவலைப் பாடுகளைப் பாதுகாத்தல், மீன்பிடிக் கலங்களுக்கான தரிப்பிடங்கள் அமைத்தல், மீன்களை எடுத்துச் செல்வதற்கான வீதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
கடலில் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்கு உணவளிக்கும் மீனவர்கள் பாதுகாப்பான தொழில் முனைவோராக வாழ்வதை உறுதி செய்வதே வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியாக அமைய வேண்டும் என்றும் சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்.



