கந்தளாய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தி/கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள அரச காணி அலுவலகத்திற்குச் சொந்தமான காணியில் அடர்ந்த காடு வளர்ந்துள்ளதால், பாடசாலை மாணவிகளுக்கும் சூழலுக்கும் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கவலை தெரிவிக்கின்றனர் .
மேலும் தெரியவருவதாவது .
ஆய்வுகூடம் மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு அண்மித்த இந்தக் காட்டுப் பகுதியில் நுளம்புகள் பெருகுவதுடன், அப்பகுதிவாசிகள் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இரவு நேர வகுப்புகள் நடைபெறும் வேளைகளில் போதைப் பொருள் பாவனையாளர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அப்பகுதியில் நடமாடுவதாகவும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் எம்.ஏ.ஜே.எம். ஜெசீல் கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் காணி அரச காணி அலுவலகத்திற்குச் சொந்தமானது என்றும், இது குறித்துப் பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் வருகை தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளிடம் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பிரதேச சபை மூலம் காட்டைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அதிபர் குறிப்பிட்டார்.
மகளிர் பாடசாலை என்பதாலும், இரவு நேர வகுப்புகள் நடைபெறுவதாலும் மாணவிகள் பாடசாலைக்கு வருவதற்கு அஞ்சும் நிலை காணப்படுவதாகவும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் காவலாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
உற்பிரதேச மற்றும் வெளிப்பிரதேச அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இப்பகுதியைப் பார்வையிட்ட போதிலும் தீர்வு எட்டப்படவில்லை எனத் தெரிவித்த பாடசாலை நிர்வாகம், மாணவிகளின் நலன் கருதி உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுக் காட்டைச் சுத்தம் செய்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.



