பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், அவ்வாறான எந்தவொரு சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் கையடக்கத் தொலைபேசிகளை ஒப்படைக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், கீழ்நிலைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரையிலான உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காகச் செலுத்த வேண்டிய வரித் தொகையைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து ஈடுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு வட்டியற்ற கடன் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




