ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழங்காலத் துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிடம் ஒப்படைப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட இந்தத் துப்பாக்கிகள், நெதர்லாந்தின் எம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகமான Rijksmuseum இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்களும் இலங்கை ஆய்வாளர்களும் இணைந்து நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்தத் துப்பாக்கிகள் இலங்கைக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தத் துப்பாக்கிகளுக்கு ஒத்த இரண்டு பழங்காலத் துப்பாக்கிகள் ஏற்கனவே 2023ஆம் ஆண்டில் இலங்கையிடம் மீளக் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அவற்றை விடப் பாரிய அளவிலான மேலும் இரண்டு வரலாற்றுத் துப்பாக்கிகளை இலங்கையிடம் மீள ஒப்படைப்பதற்கு தற்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு துப்பாக்கியில் கண்டி இராச்சியத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



