ஆலையடிவேம்பில் பால் உற்பத்தி வாழ்வாதாரத் திட்டம்; பயனாளர் பட்டியல் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!

(செல்வி வினாயகமூர்த்தி)

இலங்கை – இந்திய பங்களிப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பால் பண்ணை மற்றும் பால் உற்பத்தி ஊடான நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான பயனாளர் பட்டியல் நேற்று (27) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜிடம் சமூகமட்டப் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.

கடந்த வருடம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது, இலங்கை – இந்திய வர்த்தக நட்புறவு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அசோகாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய வர்த்தகக் குழுக்கள் இலங்கைக்கு வர்த்தக விஜயங்களை மேற்கொண்டதுடன், பல்வேறு வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இந்திய வர்த்தகக் குழுவொன்று இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தது. இலங்கையில் பால் உற்பத்தியை மேம்படுத்தி, அதனூடாக வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்துடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக 43 பேர் அடங்கிய இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த மாதம் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கும் விஜயம் செய்திருந்ததுடன், அதன் தலைவர் கைலாயபிள்ளை தலைமையில் இரண்டு கட்ட சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இந்நிலையில், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத்திட்டத்திற்கான பயனாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சமூகமட்டப் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களின் பட்டியல் பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேசசெயலாளர் தலைமையில் அடுத்த கட்ட நகர்வுகள் பிரதேசமட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சமூகமட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply