கணேமுல்ல கொலைக்குப் பழிவாங்கலா? இராணுவ அதிகாரி கொலையில் அதிர்ச்சித் திருப்பம்!

காலி, ரத்கம – பூஸ்ஸ, மலியதூவ பகுதியில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி மலியதூவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியொன்றில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணைகளில், சடலமாக மீட்கப்பட்டவர் காலி – ரிச்மண்ட் கந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நளின் துஷார டி சொய்சா என அடையாளம் காணப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், கிந்தோட்டை, மாகொல்ல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31, 38 மற்றும் 41 வயதுடைய மூவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மல்லாவி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான ‘கொமாண்டோ சலிந்த’ என்பவருக்கு 260 துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த 2025 செப்டெம்பர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 25ஆம் திகதி மாலை நண்பர்களுடன் காலி மஹாமோதர பகுதியில் மது அருந்திய பின்னர், ஜீப் வண்டியொன்றில் பூஸ்ஸ பகுதிக்குச் சென்றபோதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜீப் வண்டியிலிருந்து இறங்கிச் சென்ற அவரை, சுமார் 100 மீற்றர் தொலைவில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் ‘கரந்தெனிய சுத்தா’ தரப்பினரால் இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கண்டறிவதற்கும், கொலையின் பின்னணி தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply