தம்பலகாமம் கால்நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு – பிரதியமைச்சருடன் விசேட கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் ஏற்பாட்டில் நேற்று (28) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, கால்நடை வளர்ப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் மேய்ச்சல் தரை பற்றாக்குறை, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, கால்நடைகளுக்குப் போதிய மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்தல், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த மேய்ச்சல் நிலங்களை மீண்டும் உரிய முறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அரசாங்கத்தின் ஊடாக நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் பண்ணையாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது, கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தம்பலகாமம் கால்நடை வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தமது மேய்ச்சல் தரை பிரச்சினைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கான தீர்வை நோக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமது பிரச்சினைகளுக்கான தீர்வை பிரதியமைச்சர் பெற்றுக்கொடுப்பார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்புத் தொழில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டுள்ள நிலையில், மேய்ச்சல் தரை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவது பண்ணையாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாக அமையும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

 

Leave a Reply