
கொழும்பு, மார்ச் 24
தற்போதைய அரசாங்கம் வானம், பூமி என நாட்டின் அனைத்து வளங்களையும் ஏலம் போட்டிருக்கின்றது. இறுதியில் 220 இலட்சம் மக்களையும் ஏலம் போடுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்,
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4.2 மில்லியன் மசகு எண்ணெய் பரல்களை ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பெற்றுக்கொள்ள கடந்தவாரம் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. எனினும், இரு தினங்களுக்கு முன்னர் எரிபொருள் அமைச்சர் காமினி லொக்குகே ஒருதொகை மசகு எண்ணெய் பெற்றுக்கொள்ள அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்திருக்கின்றார். இது முற்றாக கேள்விகோரலுக்கு புறம்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மசகு எண்ணெய் தொகையை பெற்றுக்கொள்ள 50 வீதம் டொலர் செலுத்தவும் 50 வீதம் ரூபாயும் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்படுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டிருக்கின்றார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் கோபசோ நிறுவனத்துடனே இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை.
நாட்டு மக்கள் எரிபொருள், எரிவாயு , பால்மா கேட்டு வரிசைகளில் நிற்கின்றனர். ஆனால், அந்நிய பொருளாதார வலயத்தை கண்காணிப்பதற்கு, 2 டோனர் கண்காணிப்பு விமானங்கள் அதேபோன்று 4ஆயிரம் தொன் மிதக்கும் தளம், சமுத்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான மத்திய நிலையம் நிர்மாணிப்பது மற்றும் டிஜிற்றல் சட்டகம் ஒன்றை அமைப்பதற்கு நிதி வசதி பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கின்றது. இவ்வாறு வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் இடம் பெறுகிறது. இவற்றில் சில நன் கொடையாக கிடைக்கின்றன .
அரசாங்கம் டோனர் விமானங்களை நன்கொடையாக வழங்கும் நாட்டிடம் எரிபொருள், எரிவாயுவை நன்கொடையாக ஏன் கேட்க முடியாது? இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் .இவ்வாறு அரசாங்கம் வானம், பூமி என நாட்டின் அனைத்து வளங்களையும் ஏலம் போட்டிருக்கின்றது. இறுதியில் 220 இலட்சம் மக்களை ஏலம் போடுவார்கள். நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, அரசாங்கம் எரிபொருள் மூலமும் மோசடிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதனை நிறுத்தவேண்டும் என்றார்





