ஜனாதிபதியை சந்திக்கும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும்; குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை

ஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பினரை சந்தித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன், அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, அவர்களின் விடுதலைக்கு உதவ வேண்டுமென கோரி 16 கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை குறித்த குழுவினரிடம் இன்று கொழும்பில் வைத்து கையளித்துள்ளார்.

குறித்த மகஜரில்,

1) 10வருடங்கள் முதல் 26ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை-48 இதில் ஒருவர் 67 வயதான முதிய தாயார்.

2) மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில்,

மேல் நீதிமன்றிலுள்ள 7வழக்குகளில் 22பேர் விளக்கமறியல் கைதிகளாக உள்ளனர்.

தமக்களிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள்தண்டனை,30ஆண்டு சிறைத்தண்டனைகளை மேன்முறையீடு செய்ததன் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளில் 65வயதைக்கடந்த 3பேர் உட்பட 14 பேர் மேல் முறையீட்டு தண்டனை கைதிகளாக உள்ளனர்.

மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட 70 வயது முதியவர் அடங்கலாக 2பேரும், ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட குடும்பஸ்தர்கள் இரண்டு பேரும்,

200ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்ட 68வயது முதியவர் ஒருவரும்,

35ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒருவரும்,

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஒருவரும்,

05வருடங்களுக்குள் தமக்கான தண்டனையினை நிறைவு செய்து விடுதலை பெறக்கூடிய நிலையில் 06 பேரும் உள்ளனர்.

3) நீண்டகால தடுப்பு காவல், நீடிக்கும் விளக்கமறியல், தாய்மொழி அல்லாத சிங்கள மொழியில் அச்சுறுத்திபெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு ஒட்டு மொத்த சிறையிருப்பு காலத்தையும் தண்டனைக்காலமாக கருத்தில் எடுத்து வழக்கு விசாரனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். மாறாக ‘துரிதவிசாரணை’ எனக்கூறி காலத்தை போக்கக்கூடாது.

4) மேல்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றம் போன்றவற்றில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் 3 முதல் 7 மாதங்கள் என மிக நீண்ட காலத்தவணை திகதி இடப்பட்டு காலவிரயம் ஆக்கப்படுவது கவலைக்குரியது.

5) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் போன்ற குற்றப்பின்னணிகளை. கொண்ட ஏனைய சிவில் கைதிகளுடன் சேர்த்து ஒரே விடுதிகளுக்கு சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால் பல அரசியல் கைதிகள் சட்டவிரோத செயல்களுக்குப் பழக்கப்பட்டுள்ளதுடன் போதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

6) வயதானவர்கள், வலுக் குன்றியவர்கள், அவயவ பாதிப்புடையவர்கள் என்ற வகை வேறுபாடின்றி தசாப்தங்கள் கடந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் அனேகமானவர்கள் புற்றுநோய்,நீரிழிவு, இருதய நோய்,முள்ளம் தண்டு-மூட்டுவட பாதிப்பு, குடற்புண்,இரைப்பை அலர்ஜி, மற்றும் கட்புலன் செவிப்புலன் பாதிப்புகளுக்கு ஆளாகி அல்லல்படுகிறார்கள்.

7) நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் 20 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான அன்றாட செலவினங்கள் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ள தாகவும் இதனால் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீண்ட நெடுஞ் சிறை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகள் போஷாக்கான உணவு, பொருத்தமான மருத்துவங்கள் இன்றி உடல், உள ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

8) யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தண்டிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பயங்கரவாததடை சட்டத்தை காரணம் காட்டி பொதுவாக சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உரிமைகள் சலுகைகளை வழங்க மறுத்து ஓர வஞ்சனை செய்து வருகிறது சிறைத்துறை.

9) சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் தண்டனை கைதிகளின் நன்நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைக்கப்படுகின்ற வீட்டு விடுப்பு (ர்ழஅந டநயஎந )மற்றும் சாதாரண பொதுமன்னிப்பு போன்றன தமிழ் அரசியல் கைதிகளுக்கு சவாலான தாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாததடை சட்டத்தை காரணம் காட்டி நாட்டுபிரஜைகளுக்கான அடிப்படை உரித்துக்களை கூட அபகரிப்பது எவ்வகையில் நியாயம்.

10) பயங்கரவாத தடை சட்டம் என்பது மனித மேம்பாட்டுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது ஒரு வன்முறை சட்டம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது எனினும் இச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பது பற்றி பேசப்படுவதில்லை.

11) அவசர காலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீதான தண்டனைகளை நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த வகையில் தண்டனைக் கைதிகளுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

12) தண்டிக்கப்பட்ட தமிழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தயங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ அவர்கள் 2020இல், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் நேரில் தெரிவித்திருந்தார். ஆனபோதும் இரண்டு வருடங்கள் கடந்தும் வாக்குறுதி மெய்ப் படவில்லை.

13) 10 முதல் 26 ஆண்டுகள் தொடராக சிறைப்படுத்தப்பட்டு ள்ளவர்களில் பலர் நமது அன்புக்குரிய உறவுகள் சிலரையாவது யுத்தத்தில் பறி கொடுத்துவிட்டு வலிமிகுந்த போர் வடுக்களை சுமந்த வர்களாகவே உள்ளனர்.

14) 2009 இற்குப் பின்னரான காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு 13 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக செத்து மடிந்துள்ளனர்.

15) தமது நேசத்துக்குரிய உறவுகள் விடுதலை பெற்று வீடு திரும்புவார்கள் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட பெற்றோர் ஏக்கத்துடன் சாவினை தழுவிய உள்ளார்கள்.

16) தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கீடுகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமன்றி பிரிவுக்காலம் அகன்று செல்வதால் பல குடும்பங்கள் உறவுச் சிதைவு கண்டு யாரும் அறியாத அப்பாவி பிள்ளைகளின் எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.- இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply