மக்களின் குடிதண்ணீரில் கை வைத்த கோட்டா அரசு! – பிரதேச சபை தவிசாளர் சீற்றம்

திண்மக் கழிவகற்றும் வாகனங்களுக்கும், தண்ணீர் பவுசருக்கும் டீசல் இல்லை, மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

பிரதேச சபையின் முக்கிய பணியாக காணப்படுவது, திண்மக் கழிவகற்றல் மற்றும் குடிதண்ணீர் விநியோகம். ஆனால் அவற்றை சீராக மேற்கொள்வதற்கு எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றோம். இது தொடர்பில் உரியவர்களுக்கு அறிவித்துள்ளோம். ஆனால் இன்று வரை அது கிடைக்கவில்லை.

அரசு கடன்களை வாங்குகிறது. ஆனால் அதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. மக்கள் அனைவரும் இறந்த பின்னர் அபிவிருத்தி செய்து என்ன பலன். மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் தாலியைக் கூட விற்று வாழ்க்கை நடாத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிராமிய திட்டங்கள் பல வகுக்கப்பட்டுள்ளன. அதற்கு திட்ட மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். அதனை இப்போது உள்ள பொருட்கள் தட்டுப்பாடு மற்றும், விலை அதிகரிப்புக்கு மத்தியில் மேற்கொள்ள முடியாது.

காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என பொருள்களின் விலை அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையை சமாளிப்பதற்கு அரசு மாற்றுத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.- என்றார்.

Leave a Reply