
கொழும்பு, மார்ச் 27: எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ.15, ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.65 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர் மனோஜ் குப்தா கூறுகையில் ” பல தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்தாலும், பெட்ரோல், டீசல் விற்பனையால் எமது நிறுவனம் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ.15, ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.65 நஷ்டம் ஏற்படுகிறது என்றார் அவர்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்,வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தமது சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளையும், 49 ரூபாவினால் அதிகரித்தது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த ஆண்டு, முதல் தடவையாக கடந்த மாதம் ஆறாம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது.
அன்றிலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் கடந்த 11 ஆம் திகதி பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் விலைகளை மீள அதிகரித்திருந்தது.





