
கொழும்பு, மார்ச் 29
நாட்டில் வறட்சியான காலநிலை அதிகமாகக் காணப்படுவதால், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால், இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால், மின் உற்பத்திக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் தற்போது மணல் மூட்டைகளை இட்டு நிரப்பி நீரை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம தெரிவித்துள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக நீரை விநியோகிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருடாந்தம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறான நிலை காணப்படும். அதனை சிறந்த வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு மக்களின் உதவியும் அவசியமாகும். பயிர்செய்கைகள், வாகனங்களை சுத்திகரிப்பது மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்காக குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்து விக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.





