
கொழும்பு, மார்ச் 30
தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால், இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால், மின் உற்பத்திக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்ப்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறாமையினால், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது.
இதனால், நாடளாவிய ரீதியில் நாளை பத்து மணி நேரம் மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.





